கட்டுரை

புதிய பிரதமர் - மோடி!

ஆதித்தன்

நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிரதமர் ஆகிவிட்டார். இந்த வரிகளை எழுதுவது இன்று மிக எளிதாக இருக்கிறது. ஆனால் அவருடைய வெற்றிக்குப் பின்னால் இருக்கிற பிராண்ட் மார்க்கெட்டிங் உத்தி மிகப்பிரம்மாண்டமானது. நீங்கள் எந்த சித்தாந்த ஆதரவாளராகவும், மதத்தைச் சேர்ந்தவராகவும், வாக்களிக்கும் முடிவை முன்கூட்டியே எடுத்தவராகவும் இருக்கலாம். ஆனால் மோடி பிராண்டின் சந்தைப் படுத்துதலில் இருந்து தப்பித்திருக்கவே முடியாது. மோடி பிராண்ட் அரசியல் சந்தையில் விறுவிறுப்பாக விற்பனை ஆனதன் கதையைப் பார்ப்போமா?

இந்தியாவில் பொதுவாக கட்சிகளுக்குள்தான் தேர்தலில் போட்டி இருக்கும். தமிழ்நாடு என்றால் அதிமுக-திமுக. இந்தியா என்றால் காங்கிரஸ்-பாஜக. இந்தமுறை அமெரிக்க ஸ்டைலில் கட்சியைத் தாண்டி தலைவர்களுக்குள்ளான போட்டியாக திசைதிருப்பியது இவரது குழுவின் முதல் உத்தி. இதற்கு மோடியை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. ஏற்கெனவே 1970-ல் இந்திரா காந்தியை முன்வைத்து, ‘இந்திரா லாவோ, தேஷ் பச்சாவோ’ என்ற கோஷம் ஒலித்துள்ளது.

மோடி ஒரு மாநிலத்தலைவர்; தேசியத் தலைவர் அல்ல. வலதுசாரித் தலைவர். அவர் வலுவான மற்றும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக வடிவமைக்கப்பட்டார்.

நாட்டின் அடுத்த பிரதமர் என்று அவரை முன்னிலைப்படுத்தியபோது அவருடைய குழுவின் முன்னால் மூன்று தடைக்கற்கள் இருந்தன. 1) மூன்றுமுறை குஜராத் முதல்வர் ஆகியிருந்தாலும் அவர் தேசிய அளவில் அறியப்பட்ட தலைவர் அல்ல. 2) இந்த தேர்தலில் 15கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தார்கள். அவர்களுடன் 63 வயதான மோடி தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளவேண்டும். 3) 2002 குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தின் நிழல் அவர் மீது படிந்திருந்தது.

2002 மதக்கலவர நினைவுகளில் இருந்து வாக்காளர் கவனத்தைத் திசை திருப்புவது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ஆரம்பத்தில் மோடி ஆதரவாளர்கள் அவருக்கு நீதிமன்றங்கள் குற்றச்சாட்டில் இருந்துவிடுதலை அளித்திருப்பதைச் சுட்டிக் காட்டி பொதுவிவாதங்களில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் வியூகத்தை மாற்றினர். இந்துத்துவா பேசுவதைக் குறைத்து மோடியின் சமீபத்திய குஜராத் வளர்ச்சி சாதனைகளை மட்டும் முன்னிலைப் படுத்தி பேச ஆரம்பித்தனர்.

“ஒரு பிராண்ட் எந்த ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் போதும், அதைச் சமாளிக்க ஒரே வழி, பிரச்னையை ஏற்றுக்கொண்டு அதைப் பற்றி அதிகம் பேசாமல் முன்னேறிச் செல்வதுதான் ” என்று பிராண்டிங் நிபுணர்கள் பெப்சி, கொகோகோலா போன்ற பிராண்ட்களின் உதாரணங்களைக் காட்டி விளக்குகின்றனர். மோடி விஷயத்திலும் இதுவே பின்பற்றப்பட்டது.

அதிகமாக குஜராத் கலவரம் பற்றிப் பேசினால் வாக்காளர் மத்தியில் அதைப் பற்றியே பேச்சு ஓடும்.எனவேமோடியும் அவரது ஆதரவாளர்களும் அடக்கி வாசித்தனர். தவிர்க்க இயலாதபோது கொஞ்சமாகப் பேசினர்.

பாஜக வலதுசாரிக் கட்சியாக முத்திரை குத்தப்பட்டிருந்தது. பழைய தலைமையின் கீழ் அதன் வளர்ச்சி கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. எனவே வெற்றிக்கு கட்சியைத் தாண்டி மோடி என்ற பிராண்டை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைந்தது. கட்சியின் இளம் தலைவர்களும் இதை உணர்ந்தனர். எனவே மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்; கடின உழைப்பாலும் தியாகத்தாலும் செயற்கரிய சாதனைகளை செய்தவர் என்பதுபோல் மோடி பிராண்ட் உருவாக்கப்பட்டது. ஊழலற்ற அவரது பிம்பம் கட்சியின் இமேஜை மாற்றப் பயன்படுத்தப் பட்டது.

ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க ஐபாட், ஐபோன் போன்ற கருவிகள் பயன்பட்டன. பாஜகவுக்கு அதுபோல் மோடி கிடைத்தார்!

2008-ல் நடந்த ஒரு சம்பவம் தேசிய அளவில் நல்லபெயர் கிடைக்க மோடிக்கு உதவியது. டாடாவின் நேனோ கார் தொழிற்சாலை மேற்குவங்கத்தில் தொடங்க மம்தாவின் தலைமையில் தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அங்கே அது பெரும் பிரச்னை ஆனபோது, ஒரே இரவில் டாடாவுக்கு எல்லா வசதிகளையும் செய்து அந்த ஆலையை குஜராத்துக்குக் கொண்டுவந்தார் மோடி.

இதன்மூலம் அவர் தொழில்துறை வளர்ச்சிக்கு நாயகன் ஆனார்!

இந்தத் தேர்தலையொட்டி சொந்த மாநிலத்தை விட்டு வெளியே  பிரச்சாரத்துக்க்காக மோடி வந்தார். அதுவும் மிகப்பெரிய அளவில். அதாவது இந்த தேர்தலையொட்டி 5000 நிகழ்ச்சிகள்,  470 அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். நாட்டின் நீள அகலங்களைப் பயணித்து மிகக் கடுமையாக உழைத்தார்.

அவர் பாஜகவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப் படுவதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பாக பிப்ரவரி 6, 2013-ல் டெல்லியில் ஸ்ரீராம் கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் குஜராத்தின் வளர்ச்சி மாதிரி குறித்து உரையாற்றினார். அரசு வேகமாக முடிவுகளை எடுப்பதாக இருக்கவேண்டும்; பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதத்தில் இளைஞர்களின் திறன்கள் வளர்க்கப்படவேண்டுமென்று பேசினார். மாணவர்களை அது கவர்ந்தது. இதுதான் பெருமளவில் புதிய வாக்காளர்களை மோடி கவர்ந்த ரகசியம்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே அவரது மார்க்கெட்டிங் குழு செய்தித்தாள், டிவி, வானொலிகளில் மேற்சொன்ன வளர்ச்சி கருத்துகள் கொண்ட விளம்பரங்களைச் செய்தனர். குறுஞ்செய்திகள், மோடியின் தொலைபேசி குரல் போன்றவையும் இதற்கு உதவின.

எந்த பன்னாட்டு நிறுவனமும் செய்திராத அளவுக்கு சமூக வலைத்தளங்கள் மோடியின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப் பட்டன. ட்விட்டரில் அவருக்கு 40லட்சம் பின்பற்றுவோர் இருந்தனர். தொலைதூரக் கிராமங்களுக்கு அவரது பிரச்சார வீடியோக்கள் அடங்கிய வாகனங்கள் சென்றன. டீக்கடைகளில் மோடி முகம் அச்சிட்ட கப்களில் ஓசியில் தேநீர் பருக மக்கள் வந்தனர். அங்கே அவரது பேச்சைக் கேட்டனர். நாட்டின் வளர்ச்சி பற்றி அவர் பேசுவதை ஆர்வத்துடன் செவிமடுத்தனர்.

இந்த அளவுக்கு செலவழிக்க காங்கிரசுக்கு தெம்பு இல்லையா என்ன? இருந்தது. இந்த பிரச்சாரத்தைச் செய்யத் தேவையான சிறந்த மூளைகளும் அந்த கட்சியில் உண்டு. ஆனால் ஒரே விஷயம்தான். மோசமான பிராண்டை எந்த சிறந்த விளம்பரத்தாலும் வெற்றிகரமாக விற்க இயலாது.

காங்கிரஸ் தலைமையின் பலவீனம் மோடிக்கு உதவியது. “சந்தையில் ஒரு போட்டி பிராண்ட் பலவீனம் அடைந்தால் இன்னொரு பிராண்ட் தன்னை அதனுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்து பலன் ஈட்டும். காங்கிரஸ் தலைமை அதிகம் பேசாமல் இருந்ததும் ஐமுகூ இரண்டாவது ஆட்சியில் மோசமாக செயல்பட்டதும் மோடிக்கு உதவியது. கோக் வயதானவர்கள் குடிக்கும் பானம் என்று பெப்சி விளம்பரம் செய்வதையும் விண்டோஸ் மென்பொருளின் பிரச்னையை சுட்டிக்காட்டி ஆப்பிள் விளம்பரம் செய்வதையும் இத்துடன் ஒப்பிடலாம்.” என்று மோடி குழுவினரின் பிரச்சார உத்தி பற்றிக் கூறப்படுகிறது.

டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடும்போது ஒரு அணியின் கேப்டன் இல்லாமல்போய் விடுவதாக ஒரு விளம்பரத்தைக் கூட மோடி குழுவினர் போட்டனர். காங்கிரசின் தலைமையின்மையை அது சுட்டிக் காட்டியது.

நாட்டின் முன்னணி விளம்பர நிறுவனமான ஒகில்வி அண்ட் மாதரின் தலைவர் பியூஷ் பாண்டே, மெக்கான் வேர்ட்ல்டு குருப்பின் ப்ரசூன் ஜோஷி, மேடிசன் வேர்ல்டின் சாம் பால்சாரா போன்ற சிறந்த ஆளுமைகள் மோடியின் பிரச்சாரத்தை வடிவமைத்தார்கள். ‘ஆப் கி பார் மோடி சர்க்கார்’ போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களை சோஹோ ஸ்கொயர் என்ற விளம்பர ஏஜென்சி உருவாக்கியது.

‘’எந்த ஒரு பிராண்டையும் ஒரு சில மாதங்களில் உருவாக்கிவிட முடியாது. கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக  மோடி செய்தது அவருக்குக் கைகொடுத்தது” என்கிறார் பியூஷ் பாண்டே.

‘யாரும் மோசமான ஒரு பொருளை விற்றுவிட முடியாது. மக்கள் முட்டாள்கள் அல்ல. நல்ல மதிப்புள்ள பொருளை அதன் மதிப்பை வெளிப்படுத்தும் முறையில் முன்னிலைப் படுத்தவேண்டும். எந்த தேர்தலும் விளம்பரங்களால் வெல்லப்படுவது இல்லை. விளம்பரம் என்பது ஒரு கருவி மட்டுமே. காங்கிரசின் விளம்பரம் சரியில்லை என்று சொல்லக்கூடாது. மோடியின் சரியான முகம் ஒழுங்காக முன்னிலைப் படுத்தப்பட்டது என்று மட்டுமே சொல்லலாம்” என்கிறார் அவர்.

மாற்றுக்கருத்து உள்ளதா உங்களிடம்?

மோடியிடம் எதை எதிர்பார்க்கலாம்?

உடனடியாக பிரதமர் மோடி ஒரு விஷயத்தில் அவர் குஜராத்தில் செய்ததை மத்தியிலும் செய்வார் என்று எதிர்பார்க்கிறார்கள். அது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை லாபமயமாக்குவது.

2001-ல் மோடி குஜராத் முதல்வர் ஆனபோது அங்கு இருந்த மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தடுமாறிக் கொண்டிருந்தன. அவர் உடனே அவற்றை சரிசெய்ய ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு சுட்டிக் காட்டிய ஒரு விஷயம் பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கும் அரசியல் தலையீடுதான்.அவர் உடனடியாக அவற்றைக்  களைந்ததுடன் தன் நேரடி மேற்பார்வையிலேயே அந்நிறுவனங்களுக்கு தலைமை அதிகாரிகளை நியமனம் செய்தார். அத்துடன் அவர்களுக்கு போதுமான சுதந்தரமும் கொடுத்தார்.  லாபம் ஈட்டத்தேவையில்லாத சமூகப் பொதுநிறுவனங்கள் தவிர மற்ற பொதுத் துறை நிறுவனங்கள் ஒரே ஆண்டில் லாபம் ஈட்டத்தொடங்கிவிட்டன.

2010-ல் அரசு வெளியிட்ட அறிக்கையின் படி குஜராத், கேரளா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பொதுத்துறை நிறுவனங்களே லாபம் ஈட்டுகின்றன. அவற்றில் குஜராத் மாநில நிறுவனங்கள் முதலிடத்தில் உள்ளன. 5800 கோடி ரூபாய்க்கு அவை நிகரலாபம் ஈட்டுகின்றன. அங்குள்ள ஆறு பெரிய நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து 19% சராசரியாக நிகரலாபம் ஈட்டி வந்துள்ளன.

மத்திய அரசிடம் 229 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 150 லாபம் ஈட்டுபவை. 79 நஷ்டத்தில் உள்ளன. ஆனால் அவை ஈட்டும் லாபமும் அவற்றில் மொத்தம் பணிபுரியும் 14 லட்சம் தொழிலாளர்களின் ஊதியமும் சரியாகப் போய்விடுகிறது. இந்நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிக்கும் அளவுக்கும் நிர்வாகம் சரிசெய்யப்படவேண்டும். அரசியல் தலையீடுகள் குறைக்கப் படவேண்டும். இதை அவர் பதவியேற்ற ஓரிரு மாதங்களுக்குள் செய்து முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அவரால் எளிதில் செய்யக்கூடிய விஷயமாக அது இருக்கும் என்று தொழில்துறையினர் கருதுகிறார்கள்.

ஜூன், 2014.